நாட்டில் பொருளாதார மந்த நிலை இருப்பதை ஒப்புக் கொண்டு இந்த ஐந்து சீர்திருத்த நடவடிக்கைகளை உடனே மத்திய அரசு செய்ய வேண்டும் என பொருளாதார வல்லுனரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை மற்றும் அதற்கான தீர்வுகள் என்ன என்பது குறித்து ஊடகமொன்றுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று பேட்டியளித்தார்.
துறைசார் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு பதிலாக முழு பொருளாதார கட்டமைப்பையும் ஒரே நேரத்தில் முன்னெடுத்து செல்வதற்கான முயற்சிகள் இப்போது மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி அவர், பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல இந்த 5 நடவடிக்கைகளை பரிந்துரைப்பதாக கூறினார்.
1.குறுகிய காலம் வருவாய் இழப்பை சந்தித்தாலும் ஜிஎஸ்டி வரி விதிப்பை தர்க்கரீதியாக மாற்றியமைக்க வேண்டும் அதாவது சில பொருட்கள் மீதான வரியை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2.விவசாயத்தை புதுப்பிப்பது கிராமப்புற நுகர்வை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது போல் விவசாயிகள் சந்தைகளை விடுவிப்பதன் மூலம் மக்கள் கைகளில் பணம் புரளும். இதனால் கிராமப்புற மக்களிடம் நுகர்வு அதிகரிக்கும்.
3.மூலதன உருவாக்கத்திற்கான அமைப்பில் பண பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டியது அவசியம்.
4.ஜவுளி, ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ், மற்றும் வீட்டு வசதி போன்ற முக்கிய துறைகளுக்கு புத்துயிர் அளிக்க வேண்டும் இத்துறைகளை சார்ந்த சிறு குறு தொழிலாளர்கள் கடன் பெரும் முறைகளை எளிமையாக்கினால் இதை செய்ய முடியும்.
5.அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடந்து வரும் வர்த்தக போரின் காரணமாக வளர்ந்து வரும் ஏற்றுமதி வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த 5 தீர்வு நடவடிக்கைகளும் செயல்படுத்தும் பட்சத்தில் தற்போது ஐந்து சதவிகிதத்தில் உள்ள மொத்த உள்நாட்டு வளர்ச்சி அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் என தெரிவித்துள்ளார்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டில் பொருளாதார நெருக்கடி உள்ளதை மத்திய அரசு மக்கள் மன்றத்தில் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டும், என்றும் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.