பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள தமிழக அரசின் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்

தமிழக அரசால் தொடங்கப்பட்ட எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது.

அரசு நடுநிலைப் பள்ளிகளில் வளாகங்களில் செயல்படும் 2381 அங்கன்வாடிகளை எல்கேஜி யுகேஜி வகுப்புகளாக மாற்றி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட அரசாணையின்படி மூன்று ஆண்டுகளுக்கு சோதனை முயற்சியாக எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த பள்ளிகளில் தற்போது 65 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்து உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தொடக்க வகுப்புகளில் சேர்ப்பதற்காக தனியார் பள்ளிகளை நாடும் பெற்றோர்களை அரசு பள்ளிக்கு கொண்டு வர, பள்ளிக் கல்வித்துறை எடுத்த இந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்திருப்பதாக சொல்லப்படுகின்றது. பெற்றோர்களிடம் கிடைத்திருக்கும் இந்த வரவேற்ப்பை தக்க வைத்துக்கொள்ள இந்த வகுப்புகளுக்கென்று பிரத்தியேக ஆசிரியர்களை நியமிக்க வேண்டியது அவசியம் என்கிறார்கள், பணி நிரவல் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள்.

அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை மூன்று வயதிலேயே தொடங்குவதற்கு சில கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க தான் செய்கிறார்கள். எனினும், தங்கள் பிள்ளைகளும் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை படிக்க வேண்டும் என நினைக்கக்கூடிய பொருளாதாரத்தில் பின்தங்கிய பெற்றோர்களிடம் அரசின் இந்த நடவடிக்கை வரவேற்ப்பை பெற்று இருப்பதை மறுக்க முடியாது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே