இந்தியாவில் இளம் பெண்கள் அழகி போட்டியில் பங்கேற்பது சாதாரணம் ஆகி விட்ட நிலையில், 60 வயதிலும் அழகிப் போட்டியில் பங்கேற்று உள்ளனர் இந்த முதிர் அழகிகள்.
அழகிப் போட்டி என்றாலே இளம்பெண்கள் ஒய்யார நடை போட்டு வருவது தான் நம் கண்களில் வந்து செல்லும். ஆனால் பேரக்குழந்தைகளை கொஞ்சும் வயதில் பாட்டுகளுக்கு அழகிப் போட்டி என்றால் நம்பமுடிகிறதா???
கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி அருகே நட்சத்திர விடுதி ஒன்றில், “மிஸ்ட்ரஸ் இண்டியா கிராண்ட் மதர்- 2019” எனும் பெயரில் பாட்டிகளுக்கான அழகுப்போட்டி நடைபெற்றது.
இந்திய அளவிலான போட்டி என்பதால் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, டெல்லி ,மும்பை, பீகார் என 19 மாநிலங்களிலிருந்து வந்திருந்த 19 போட்டியாளர்கள், தங்களது அழகை வெளிப்படுத்தும் விதமாக அரங்கில் நளினமாக நடைபோட்டனர்.
பாட்டிகள் அணிவகுத்து வந்தபோது அவர்களின் சொந்தங்கள் மற்றும் பேரக்குழந்தைகள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில், சிறந்த சிகை அலங்காரம், சிறந்த உடல் கட்டமைப்பு, சிறந்த இளமை தோற்றம் என பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.
இறுதியில் மூன்று போட்டியாளர்கள் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதில், கர்நாடகத்தைச் சார்ந்த ஆர்த்தி என்பவர், இந்திய அழகுப் பாட்டியாக நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு மகுடம் சூட்டப்பட்டது.