டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அஜித்தோவல், உலக நாடுகளிடம் இந்தியாவைப் பற்றி பொய்யான பிரச்சாரத்தை பாகிஸ்தான் அரசு செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.
காஷ்மீர் மக்களை குறிவைத்து பாகிஸ்தான் தீவிரவாதிகளும் ராணுவமும் தாக்குதல் நடத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீநகரில் இருந்து 750 சரக்கு லாரிகள் செல்வதாக கூறிய அஜித் தோவல், இரண்டு தீவிரவாதிகள் ஊரில் முக்கியமான பழவியாபாரியான ஹமீதுல்லா ராத்தரை தாக்கியதாக தெரிவித்தார். அவருடைய ஊழியர்கள் இரண்டு பேரை பிடித்துச் சென்ற தீவிரவாதிகள் பழவியாபாரியின் மகன் முகமது இர்ஷாதை துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவித்தார்.
மற்றொரு சம்பவத்தில் காலணி வியாபாரி ஒருவர் கடையை திறந்ததற்காக அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்றும் அஜித் தோவல் தெரிவித்தார்.
காஷ்மீரில் அமைதியற்ற பதற்றமான சூழலை உருவாக்கி வரும் பாகிஸ்தான் சர்வதேச அரங்குகளில் காஷ்மீரைப் பற்றிய பொய்ப்பிரச்சாரத்தை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்த அஜித் தோவல், ஓரிரு சம்பவங்களை வைத்து ஒட்டுமொத்த மக்களின் கருத்தாக பிரதிபலிக்க பாகிஸ்தான் முயற்சிப்பதாக தெரிவித்தார்.
காஷ்மீரில் ராணுவம் பொதுமக்களிடம் எந்த அத்துமீறலையும் நடத்தவில்லை என்றும், தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தானுடன் போராடி வருவதாகவும் அஜித் தோவல் தெரிவித்தார்.
இதுவரை 230 தீவிரவாதிகள் ஊடுருவும் முயற்சி தடுக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜம்மு காஷ்மீரில் 93 சதவீதம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு விட்டதாகவும் அஜித் தோவல் தெரிவித்தார்.
சிறை வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் தலைவர்கள் மீது எந்த வித குற்ற வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய அஜித் தோவல், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் இது என்று குறிப்பிட்டார்.