நீட் தேர்வு ஆள்மாறாட்டம்… தொடரும் கைது படலம்…!

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில், எஸ்.ஆர்.எம். கல்லூரி முதல்வர் நள்ளிரவில் விசாரணை ஆஜரான நிலையில், சத்யசாய் மற்றும் பாலாஜி மருத்துவக் கல்லூரி முதல்வர்களிடம், தேனியில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் ராகுல் என்ற மாணவரும், அவரது தந்தையும் கைது செய்யப்பட்டனர். 

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த வழக்கில், மாணவர் உதித் சூர்யாவையும் அவரது தந்தை வெங்கடேசனையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமும், தரகர் ஜோசப் என்பவரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திய போது, கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக நீட் தேர்வில் இன்னும் பல ஆள்மாறாட்டங்கள் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.

பாலாஜி, எஸ்.ஆர்.எம். மற்றும் சத்ய சாய் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் இரு மாணவர்கள் மற்றும் ஒரு மாணவி ஆகியோர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்திருப்பதாகப் புகார் எழுந்தது.

அவர்களில், எஸ்.ஆர்.எம். கல்லூரியில் படித்து வந்த பிரவீன் என்ற மாணவர், ஆள்மாறாட்டம் செய்தது உறுதி செய்யப்படவே, அவரையும் அவரது தந்தை சரவணன் என்பவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

ராகுல் என்ற மாணவரிடமும், அபிராமி என்ற மாணவியிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அவர்களது பெற்றோர்களிடமும் தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், ராகுலையும் அவரது தந்தை டேவிஸ் என்பவரையும் சிபிசிஐடி கைது செய்துள்ளது. மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் அவர்கள் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

 மேலும் நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு அந்தந்த பயிற்சி மையத்தில் தேர்வு பெற்றவர்களின் விவரங்களை சிபிசிஐடி சேகரித்து வருகிறது. நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமையிடமும் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.

இதனிடையே பாலாஜி, சத்ய சாய் மற்றும் எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்கள் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி சம்மன் அனுப்பி இருந்தது.

இதை அடுத்து எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி முதல்வர் நள்ளிரவில் தேனி சமதர்மபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார்.

அவரிடம் சுமார் ஒரு மணிநேரம் விசாரணை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று அதிகாலையில், சத்ய சாய் மற்றும் பாலாஜி மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்கள் சிபிசிஐடி முன் விசாரணைக்கு ஆஜராகினர்.

ஆள்மாறாட்டப் புகாரில் சிக்கியுள்ள மாணவர்கள் குறித்தும், அவர்களது ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டது குறித்தும், எஸ்.பி. விஜயகுமார் விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் தொடர்புடைய இன்னும் பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

வழக்கின் விசாரணை பாதிக்கப்பட்டு, தவறு செய்தவர்கள் தப்பித்து விடக் கூடாது என்பதற்காக சம்மன் அனுப்பப்பட்ட நபர்களின் விபரங்களை சிபிசிஐடி போலீசார் ரகசியமாக வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே