திரிபுரா மாநிலம் முழுவதும் கோவில்களில் ஆடு வெட்டுவதற்கு தடை விதித்து அந்த மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த மாநிலத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான மாதா திரிபுரேஸ்வரி கோவிலில் உள்ள சக்தி மடத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு ஆடு பலியிடப்படுவது வழக்கம். இதற்கான நிதியை மாநில அரசு அளித்து வருகிறது.
இதனை எதிர்த்து சுபாஷ் பட்டாச்சார்ஜி என்ற வழக்கறிஞர், திரிபுரா உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். அதில் அவர், இந்து உணர்வை புண்படுத்தும் வகையில் தினந்தோறும் ஆடு பலி கொடுப்பது அமைந்திருப்பதாக கூறி இருந்தார்.
இதற்கு பதில் அளித்த திரிபுரா அரசு வழக்கறிஞர், “சுதந்திரத்துக்கு முன்னர் இருந்தே கோவிலில் ஆடு பலியிடும் நடைமுறை பின்பற்றப்படுவதாகவும், வீட்டு விலங்கு தியாகம் என்பது வழிபாட்டின் ஒரு அங்கமாக இருப்பதால் அது இன்னும் தொடர்வதற்காகவும், அதை நிறுத்த முடியாது” என்றும் வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களுக்கு பின்னர் தலைமை நீதிபதி சஞ்சய்கரோல் மற்றும் நீதிபதி அரிந்தம் லோத் ஆகியோர் அடங்கிய அமர்வு 72 பக்க தீர்ப்பை அளித்துள்ளது.
சமுதாயத்தில் சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கான அனைத்து தவறான நடைமுறைகளையும் அமல்படுத்துவது அரசின் கடமை ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.
இத்தகைய நடைமுறைகளில் பங்கேற்பதற்கு பதிலாக, கோவில்களில் விலங்குகளை படுகொலை செய்வதை தடை செய்யும் சட்டத்தை அரசு இயக்க வேண்டும் என்றும், இது பொது ஒழுங்கு, அறநெறி மற்றும் ஆரோக்கியத்துக்கு எதிராக உள்ளது என்றும் கூறிய நீதிபதிகள், திரிபுரா மாநிலம் முழுவதும் கோவில்களில் ஆடு வெட்டுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.