தமிழகத்தில் இன்று லோக் அதாலத் மூலம் 2 லட்சத்து 21 ஆயிரத்து 660 வழக்குகள் விசாரணை

தமிழகத்தில் இன்று நடைபெற்றுவரும் லோக்அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 2 லட்சத்து 21 ஆயிரத்து 660 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு உத்தரவின்படி லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றங்கள் நடத்தப்படுகின்றன.

நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்கும் வகையில் இந்த ஆண்டு மார்ச், ஜூலை, செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் லோக் ஆதாலத் நடத்த தேசிய லோக் அதாலத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி தமிழத்தில் இன்று நடைபெறும் லோக் அதாலத்களில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சமரசம் செய்யத்தக்க காசோலை மோசடி வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 978 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

மேலும் நீதிமன்ற விசாரணைக்கு வருவதற்கு முன்பான காசோலை மோசடி வழக்குகள், தொழிலாளர் தகராறு வழக்குகள், மின்சாரம், தண்ணீர் கட்டணம் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட 62 ஆயிரத்து 682 வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

இதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் 10 அமர்வுகளும், உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் 8 அமர்வுகளும், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 6 அமர்வுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர தமிழகம் முழுதும் கீழமை நீதிமன்றங்களில் 489 அமர்வுகளும் அமைக்கப்பட்டுள்ளன. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே