சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமாணி அண்மையில் மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி காலியானது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தற்போது மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ஏ.கே.மிட்டலை நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஏ.கே.மிட்டல் 1977ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர்.தொடர்ந்து பஞ்சாப் – ஹரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி இவர் 2004ம் ஆண்டு அதே நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கி ஜூன் வரை பஞ்சாப் – ஹரியானா உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த அவர், இந்த ஆண்டு மே 28ஆம் தேதி மேகாலயா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
தற்போது இவரை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
இதனிடையே மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு பணியிடமாற்றம் செய்தததை மறுபரிசீலனை செய்யக் கோரி உச்சநீதிமன்ற கொலிஜியத்தில் தலைமை நீதிபதி தஹில் ரமாணி செய்த முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 28ந் தேதி மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தஹில் ரமாணி பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இந்த பணியிடமாற்றத்தை மறுபரிசீலனை செய்யுமாறு தஹில் ரமாணி சார்பில் கொலிஜியத்திற்கு கடிதம் எழுதப்பட்டது. அந்த கடிதத்தை பரிசீலித்த கொலிஜியம், தஹில் ரமாணியை மேகாலயாவிற்கு பணியிடமாற்றம் செய்த உத்தரவை திரும்ப பெற முடியாது என்று கூறியுள்ளது.
மேலும் மேகாலயா நீதிமன்றத்தின் சிறப்பான நிர்வாகத்திற்காகவே தஹில் ரமாணி பணியிடமாற்றம் செய்யப்பட்டதாகவும் கொலிஜியம் கூறியுள்ளது.