சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரி பேருந்து ஒன்று நடுரோட்டில் திடீரென தீப்பித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.
சென்னையை அடுத்த நெடுங்குன்றத்தில் அன்னை வேளாங்கண்ணி என்ற தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரிக்குச் சொந்தமான பேருந்து 40க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் தேனாம்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது.
தாம்பரத்தையடுத்த பெருங்களத்தூரில் உள்ள இரணியம்மன் கோவில் அருகே சென்ற போது திடீரென பேருந்தில் தீப்பிடித்தது. மளமளவென தீ பரவியதால் பேருந்து முழுவதும் தீயில் கருகி சாம்பலாயின.
தீ பரவுவதற்குள் பேருந்தில் இருந்த மாணவர்கள் உடனடியாக வெளியேறியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர் கொழுந்து விட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி பேருந்து நடுரோட்டில் தீ விபத்தில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.