செஞ்சி அருகே வெடிவிபத்தில் சிதறிய வாகனம் – 3 பேர் பலி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பட்டாசு ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் வெடித்துச் சிதறியதில், இருவர் உடல் சிதறி உயிரிழந்தனர். 9 பேர் தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

திண்டிவனத்தில் இருந்து சென்னை – திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் சென்ற சரக்கு வாகனம் ஒன்று, காலை 8 மணி அளவில் வடவனூர் என்ற இடத்தில், சாலையோர பஞ்சர் கடையில் நின்றது.

சரக்கு வாகனத்தில் இருந்து இறங்கிய ஓட்டுநர், ரேடியேட்டர் பழுதடைந்து புகை கிளம்புவதால், தண்ணீர் கொடுக்குமாறு பஞ்சர் கடை உரிமையாளர் ஜனார்தனன் என்பவரிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது ஆட்டோவின் பின்புறத்தில் தீப்பற்றி எரிவதை ஜனார்தனன் பார்த்துள்ளார். என்ன சரக்கு என்று கேட்ட போது பட்டாசு என்று ஓட்டுநர் கூறவே, பஞ்சர் கடை உரிமையாளரான ஜனார்தனன், தனது இருசக்கர வாகனத்தை சிறிது தூரத்தில் பாதுகாப்பாக வைப்பதற்காக எடுத்துச் சென்ற போது பட்டாசு வெடித்துச் சிதறியது.

பட்டாசுகள் வெடித்ததில் சரக்கு வாகனம் சுக்கு நூறாக நொறுங்கியது. பட்டாசு வெடிப்பின் தாக்கத்தால், அரை கிலோ மீட்டர் தூரம் வரை இருந்த கடைகள், வீடுகளில் கதவு ஜன்னல்களில் இருந்த கண்ணாடிகள் நொறுங்கின.

அரசுப் பேருந்து ஒன்றின் கண்ணாடி உடைந்தது. தேநீர் கடை ஒன்று முற்றிலும் சிதைந்தது.

இந்த விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி, சிதறி உயிரிழந்தனர்.

உடல் உறுப்புகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததாக நேரில் பார்த்தவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே