சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் – அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை பிடிக்க 5 தனிப்படை

பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தது தொடர்பான வழக்கில், சட்டவிரோதமாக பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை பள்ளிக்கரணை மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளம்பெண் சுபஸ்ரீ மீது, சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியதால் இளம்பெண் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இளம்பெண் உயிரிழந்தது தொடர்பாக வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

விபத்துக்கு காரணமான சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனர், அதிமுக முன்னால் கவுன்சிலர் ஜெயகோபாலின் மகன் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்ததாகும்.

இதனால் விபத்துக்கு முக்கிய காரணமாக கருதப்படும் ஜெயகோபாலை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஜெயகோபாலை கைது செய்ய பள்ளிக்கரணை ஆய்வாளர் அழகு, மடிப்பாக்கம் ஆய்வாளர் மகேஷ்குமார், உதவி ஆய்வாளர்கள் திருநாவுக்கரசு, சுகுமார் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆரோக்கியராஜ் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தனிப்படை போலீசார் ஜெயகோபாலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே