சந்திரயான்-2 விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதையில் நான்காவது நிலைக்கு இன்று வெற்றிகரமாக முன்னேறி உள்ளதாக இஸ்ரோ அறிவித்திருக்கிறது.
நிலவின் தெற்குப் பகுதியை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த மாதம் 22ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதனால் நிலவை நோக்கி சீறிப் பாய்ந்த சந்திரயான்-2 நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் நுழைந்து சுற்றி வருகிறது.
இந்நிலையில் சந்திரயான்-2 விண்கலம் நிலவில் நான்காவது நிலைக்கு முன்னேறி உள்ளதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருக்கிறது. அடுத்ததாக சந்திரயான்-2 விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதையில் ஐந்தாவது நிலைக்கு வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முன்னேறும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
செப்டம்பர் 7-ஆம் தேதி திட்டமிட்டபடி சந்திரயான்-2 விண்கலம் அதிகாலை 1.55 மணி அளவில் நிலவில் தரை இரக்கப்படும் என்று இஸ்ரோ ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.