விழுப்புரம் மாவட்டத்தில் குளம் காணாமல் போனதாக தொடரப்பட்ட வழக்கில், அனைத்து ஆவணங்களுடன் அதிகாரிகள் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா வெள்ளிமேடுபேட்டை கிராமத்தில் 200 ஆண்டுகளுக்கு மேலாக இருந்துவந்த கோமுட்டிகுளம் என்ற குளத்தை கட்டிட கழிவுகளைக் கொண்டு, முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் ராஜதுரை நிரப்பி, குளத்தை மாயமாக்கிவிட்டதாகக் கூறி, வழக்கறிஞர் எம்.ஞானசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி அமர்வு, குளம் தொடர்பான வருவாய்த்துறை ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தனர்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் தனித்தனியாக பதில் மனு தாக்கல் செய்தனர்.
‘ஏ’ ரிஜிஸ்டரில் சம்மந்தப்பட்ட சர்வே எண்ணில், மாரியம்மன் கோவில் உள்ளது என்றும், குளம் இல்லை என்றும், ஆரம்ப சுகாதார மையம் மட்டுமே உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
ஆனால், கிராம வரைபடத்தில் அங்கு குளம் உள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மாறுபட்ட தகவல்களுடன் பதில் மனுக்களை தாக்கல் செய்த அதிகாரிகளுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், இந்த திருத்தத்தை யார் செய்தது? ‘ஏ’ ரிஜிஸ்டரில் மாற்றப்பட்டதா? இல்லை வரைபடத்தில் மாற்றப்பட்டதா?’ என்று நீதிபதிகள் கேள்விகள் எழுப்பினர்.
இதையடுத்து, கோமுட்டி குளம் இருந்ததா? இல்லையா? என்பதற்கு அனைத்து ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரும் 24ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.