சென்னையில், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை சூளைமேட்டில் இயங்கிவரும் விடுதி ஒன்றில் தங்கி, சிலர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டுவருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் சென்றது.
அதன் பேரில், காவல் உதவி ஆணையாளர் மகேஸ்வரி தலைமையிலான 4 காவலர்கள் கொண்ட தனிப்படை குழுவினர், சம்பந்தப்பட்ட விடுதிக்கு இரவு நேரத்தில் சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு 3 பேர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
அதில் ஒருவர் தப்பியோடிய நிலையில், மற்ற இருவரையும் போலீசார் கைதுசெய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடந்த முதல் கட்ட விசாரணையில், அவர்களது பெயர் ராகுல் ஜெயின் மற்றும் தினேஷ் குமார் என்பதும், இருவருமே சென்னை சௌகார்பேட்டையைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
இருவரிடமுமிருந்து சுமார் 53 லட்ச ரூபாய் பணம், 3 செல்போன்கள், 3 லேப் டாப்கள் மற்றும் 2 பணம் கணக்கிடும் எந்திரங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
பணம் கட்டி ஏமாந்தவர்கள் யார், யார், சூதாட்டம் தொடர்பாக வெளிநாட்டு நபர்களிடம் இவர்களுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா?? என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.