விமான நிலையங்களில் பயணிகளுக்கு உதவி செய்யும் வகையில் ஏர் இந்திய நிறுவனம் விரைவில் வழிகாட்டி சேவையை வழங்கவுள்ளது.
இந்த வசதியை பெறுவதற்கு 2 ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாய் வரை பயணிகளிடம் இருந்து கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் ஏர் இந்திய விமான நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் சந்திப்பு மற்றும் வாழ்த்து என்ற திட்டத்துக்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதியளித்தது. அதன்படி நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் ஒரு நிறுவனத்தை தேர்ந்தெடுத்து அதன் மூலம் பயணிகளுக்கு நியாயமான கட்டணத்தில் கூடுதல் சேவைகளை வழங்க முடியும்.
அந்த வகையில் ஏர் இந்திய விமானத்தில் உயர் வகுப்பில் பயணம் செய்வோர் கூட இனி பார்க்கிங்கில் இருந்து விமானம் ஏறும் வரை அனைத்து நடைமுறைகளுக்கும் வழிகாட்டி ஒருவரை உடன் அழைத்து செல்லலாம்.
முதற்கட்டமான டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களில் அனைத்து வகை பயணிகளுக்கும் இந்த சேவை வழங்கப்படவுள்ளது.
உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுதிறனாளிகள், சிறப்பு கவனம் தேவைப்படும் பயணிகளுக்கு ஏர் இந்தியா தொடர்ந்து இலவச சேவையை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் வேறுசில தனியார் நிறுவனங்கள் இதுபோன்ற சேவைகளை வழங்கி வருகின்றன. சந்திப்பு மற்றும் வாழ்த்து திட்டத்தின் மூலம் டெல்லியில் ஓய்வறைகளை நிர்வகிக்கும் தனியார் நிறுவனமான பிளாசா பிரீமியம் குழுமத்தின் சந்தைப்படுத்தல் தலைவர் பவ்யா குக்ரேஜா கூறுகையில் புதிய வசதி குறித்து பயணிகள் இன்னும் அறிந்திருக்காததால், மருத்துவமனை மற்றும் ட்ராவல் ஏஜென்ட்கள் மூலம் தங்களை அணுகுவதாக தெரிவிக்கிறார்.
இதுபோன்ற சேவைகள் மற்ற நாடுகளில் உள்ள விமான நிலையங்களில் கிடைக்கின்றன ஆனால் இந்தியாவில், அவை ஒழுங்கற்ற முறையில் உள்ளன என்றும் அது ஒழுங்கமைக்கப்படும் என்றும் இதன்மூலம் விமான நிலையங்களில் எளிமையான அணுகுமுறை உருவாகி கால தாமதம் தவிர்க்கப்படும் என்றும் விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.