உடல் பருமன் காரணமாக நடிகைகள் கிண்டலுக்கு உள்ளாவது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
நடிகைகள் என்றாலே உடலை கட்டுமஸ்தாக வைக்க வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பு. ஆனால் உடல் பருமன் என்பது வெறும் பயிற்சி சார்ந்தது அல்ல ஹார்மோன்கள் சார்ந்தது என்பதை பலரும் உணர்வதில்லை.
நடிகைகள் உடல் பருமனாக புகைப்படங்களை பகிர்ந்தாலோ ஓடி சென்று கிண்டலடிக்கும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கின்றது. இந்த வகை கிண்டலுக்கும் கேலிக்கும் அண்மையில் ஆளானவர் நடிகை அனுஷ்கா.
தமிழ் சினிமாவில் கதைக்கு ஏற்ப தன்னையே வருத்திக் கொள்ளும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை அனுஷ்கா. தமிழில் வெளியான “இஞ்சி இடுப்பழகி” படத்திற்காக உடல் எடையை அதிகரித்து நடித்தவர்.
அதன் பின்னர் உடலை குறைக்க படாதபாடு பட்டார். அதன் பின்னர் வெளியான பாகுபலி-2 திரைப்படத்தில் தனது காட்சிகளுக்காக ஓரளவு உடல் பருமனை குறைத்து இருந்தார்.
இதனிடையே அண்மையில் விமான நிலையம் ஒன்றில் இருந்து அனுஷ்கா வெளிவரும் புகைப்படம் வெளியானது. அவரது உடல் பருமன் அதிகரித்திருப்பதை காரணம் காட்டி அவரை கிண்டல் அடித்தது ஒரு கும்பல். ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் அனுஷ்காவின் ரசிகர்கள். அனுஷ்காவின் உழைப்பை கொச்சைப்படுத்த வேண்டாம் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதே போன்று அடிக்கடி கிண்டலுக்கு உள்ளாக்கப்படுபவர் நடிகை நித்யா மேனன். அவரது உடல் பருமனை வைத்து கடும் கிண்டலும் கேலியும் செய்யப்படுவது உண்டு. நான் தினமும் உடற்பயிற்சி செய்கின்றேன் இருப்பினும் உடல் எடை குறையவில்லை ஹார்மோன் பிரச்சனைக்கு நான் என்ன செய்ய முடியும் என கேள்வி எழுப்பினார் நித்யா மேனன்.
என் உடல் பருமனை பற்றி நான் கவலைப்படவில்லை என வெளிப்படையாகவே நடிகை நித்யா மேனன் தெரிவித்தார்.
நடிகை நஸ்ரியா முன்னாள் நடிகைகள் பலரும் இது போன்று கேலி கிண்டலில் இருந்து தப்பவில்லை.
நடிகைகள் தங்களை அழகாக காட்டிக் கொள்வதற்காகவே மெனக்கெடுகின்றனர். ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் அவர்களின் உருவம் மாறினால் கேலியும் கிண்டலும் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே பலரின் கருத்தாக உள்ளது.