இந்தியப் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று சரிவு

இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் இன்று சரிவுடன் காணப்படுகிறது. இதனிடையே ஆபரணத் தங்கத்தின் விலையும் சவரனுக்கு 168 ரூபாய் குறைந்துள்ளது.

காலை வர்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் 350 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டியும் 100 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்து, 10 ஆயிரத்து 750 புள்ளிகளுக்கு கீழே சென்றது.

அமெரிக்க மத்திய வங்கி, கடன் வட்டி விகிதத்தைக் எதிர்பார்த்தபடி கால் சதவீதம் குறைந்த போதிலும், வட்டி குறைப்பு நடவடிக்கை தொடர வாய்ப்பில்லை என்பது போல தெரிவித்திருந்தது.

இதனால் உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் மத்தியில் எச்சரிக்கை உணர்வு காணப்படுவது, பங்குச் சந்தைகளில் கலப்பான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய பங்கு சந்தைகளில் இதே நிலை காணப்படுகிறது. இந்திய பங்குச் சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பது அதிகரித்ததும், அழிவுக்கு ஒரு காரணமாகி உள்ளது.

வங்கி, ஆட்டோமொபைல், உலோகம், தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகள் விற்று தள்ளப்பட்டதால் குறியீட்டு எண்களில் சரிவு ஏற்பட்டது.

இதனிடையே ஆபரண தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 168 ரூபாய் குறைந்து, 28 ஆயிரத்து 632 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 21 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 579 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே