சென்னையில் பெண் ஒருவர் 21 சவரன் நகை மற்றும் பணத்துடன் ஆட்டோவில் தவறவிட்ட கைப்பையை அந்த பையிலிருந்த செல்போன் சிக்னல் மூலம் விசாரணை நடத்தி காவல்துறையினர் கண்டுபிடித்து ஒப்படைத்தனர்.
ராஜபாளையத்தை சேர்ந்த பாண்டியமைதிலி என்பவர் தனது உறவினர்களுடன் மயிலாப்பூரில் உள்ள அவரது சித்தப்பா வீட்டிற்கு வந்துள்ளார். அண்ணா சதுக்கத்தில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு அனைவரும் ஆட்டோவில் மீண்டும் மயிலாப்பூர் திரும்பியுள்ளனர். வீட்டிற்கு வந்த பிறகுதான் கைப்பையை ஆட்டோவில் மறந்து வைத்து விட்டு வந்தது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக மெரினா காவல் நிலையத்தில் பாண்டியமைதிலி புகார் அளித்தார். அந்த கைப்பையில் 21 சவரன் தங்க நகைகள், செல்போன், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஆதார், வாக்காளர் அடையாள அட்டைகளும் இருந்ததாக அவர் தெரிவித்திருந்தார். மேலும் அந்த ஆட்டோவில் வலது பக்கத்தில் சிறிய கதவு போன்ற அமைக்கப்பட்டு இருப்பதையும் அவர் அடையாளமாக கூறினார். இதையடுத்து முதலில் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில் அவர் ஆட்டோவில் சென்றதது உறுதியானது. ஆனால் ஆட்டோ எண் தெளிவாக தெரியாமல் இருந்தது.
இதையடுத்து கைப்பையில் இருந்த செல்போன் சிக்னலை கொண்டு போலீசார் விசாரணை நடத்திய போது அந்த செல்போன் புளியந்தோப்பு பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் புளியந்தோப்பு பகுதியில் போலீசார் ஆய்வு செய்து, குறிப்பிட்ட ஆட்டோவை அடையாளம் கண்டனர்.
அந்த ஆட்டோவில் பயணிகள் இருக்கைக்கு பின் பகுதியில் அந்த கைப்பை இருந்தது. செல்போன் ஒலி அளவு குறைந்து வைக்கப்பட்டிருந்ததால் ஆட்டோ ஓட்டுனருக்கும் அந்த கைப்பை இருந்தது தெரியவில்லை. அந்த பையை மீட்டு ஒப்படைத்த காவல்துறையினருக்கு பாண்டியமைதிலி மற்றும் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.