அமேசான் காடுகளில் பற்றி எரியும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த அமெரிக்காவின் உதவியை பிரேசில் நாடியுள்ளது.
உலகிலேயே பெரிய மலை காடான அமேசானில் காட்டு தீ வேகமாக பரவி வருகிறது. பரவிவரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த உதவி செய்ய தயாராக இருப்பதாக ஜீசெவென் அமைப்பின் உறுப்பு நாடுகள் தெரிவித்து இருந்தன. ஆனால் அந்த உதவியை பிரேசில் அதிபர் ஜைர் போல்சனரோ ஏற்றுக் கொள்ளவில்லை.
தற்போது அமேசானில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினரும் இணைந்து பிரேசில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கடந்த 29ம் தேதி மட்டுமே அமேசானில் 1255 காட்டுத்தீ பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், கடந்த 17ம் தேதி முதல் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச காட்டுத்தீ எண்ணிக்கை இதுதான் என்றும் பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளது. இது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பிரேசில் அதிபரின் மகன் எடுவர்டோ போல்சனரோ மற்றும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் அமெரிக்கா சென்று வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பை சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பிற்கு பிறகு பேசிய எடுவர்டோ போல்சனரோ, தான் பிரேசில் சென்றதும் தனது தந்தையுடன் ஆலோசனை நடத்திய பின், டிரம்ப்புடன் நடத்தப்பட்ட ஆலோசனை குறித்தும் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்தும் அறிவிப்பு வெளியிடப்படும் என கூறினார்.
இந்த சந்திப்பின்போது காட்டுத்தீ மட்டுமின்றி வர்த்தகம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.