கலர்ஸ் தமிழ் நடத்திய மெய்நிகர் யோகா – பிரபலங்கள் பங்கேற்பு

தமிழ்நாட்டின் மிக இளமையான  பொது பொழுதுபோக்கு (GEC) சேனலான கலர்ஸ் தமிழ், இந்த ஆண்டின் சர்வதேச யோகா தினத்தை ஞாயிற்றுக்கிழமையன்று ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் சென்ட்ரல் உடன் இணைந்து ஒரு விரிவான மெய்நிகர் யோகா அமர்வை நடத்தி கொண்டாடியது.

உலக ஆரோக்கியத்திற்கான யோகா” என்ற பெயரில் நடைபெற்ற இந்நிகழ்வானது, மனநல மற்றும் உணர்வுரீதியிலான நலவாழ்விற்காக நமது தினசரி வாழ்க்கையில் யோகாவை நடைமுறையில் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.  நிபுணர்கள் அடங்கிய ஒரு குழுவால் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் 200 நபர்கள் வெகு ஆர்வத்தோடு பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  தங்களது சொந்த வீடுகளில் பாதுகாப்பாகவும், வசதியாகவும் இருந்துகொண்டே தங்களுக்கு மிகவும் பிடித்த கலர்ஸ் தமிழ் நட்சத்திரங்களோடு சேர்ந்து பார்வையாளர்கள் ஒவ்வொருவருமே இந்த யோகா ஆசனங்களை செய்தனர்.

1 மணி நேரம் நீடித்த இந்த மின்-யோகா நிகழ்வை பிரபல ஆயுர்வேத மருத்துவ மற்றும் விளையாட்டு துறைக்கான சிகிச்சை சிறப்பு மருத்துவரான டாக்டர். தர்மேஷ் குபேந்திரன், இயன்முறை மருத்துவரும் யோகா பயிற்றுனருமான டாக்டர். சிம்ரன்ஜீத் கவுர், தசைக்கூட்டு இயன்முறை மருத்துவரான டாக்டர். கிருஷ்ணா ஷா மற்றும் பிரலப விளையாட்டு சிகிச்சை சிறப்பு நிபுணரான திரு. சாகர் பூஜாரி மற்றும் மெட்ராஸ் சென்ட்ரல் ரோட்டரி கிளப்பின் தலைவர் திரு. சஞ்சய் துர்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் மற்றும் ஆன்மீக ரீதியாகவும் பயனளிக்கும் ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்காக யோகாவின் இன்றியமையா பங்கை, குறிப்பாக மனஅழுத்தம் நிறைந்த இந்த காலகட்டத்தில், வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்வு தொகுத்து வழங்கப்பட்டது.  கடந்த பல நூற்றாண்டுகளாக முழுமையான ஆரோக்கியத்தையும், நலவாழ்வையும் வழங்குகின்ற சக்திமிக்க வழிமுறையாக யோகா இருப்பது எண்பிக்கப்பட்டிருக்கிறது.  மிக அண்மைக்கால ஆண்டுகளில் உடல்சார்ந்த மற்றும் மனநலம் சார்ந்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கின்ற நிலையில் உடற்தகுதி ஆர்வலர்கள் மத்தியில் வாழ்க்கையின் ஒருங்கிணைந்த ஒரு அம்சமாகவே யோகா மாறிவிட்டது.  ஒவ்வொரு ஆசனம் பற்றியும் தங்களது மேலான கருத்துகளை பகிர்ந்துகொண்ட இந்த நிபுணர்கள், உடலுக்கும், மனதுக்கும் இவைகள் எப்படி உதவுகின்றன என்று விளக்கிக்கூறினர்.

கலர்ஸ் தமிழ் சேனலின் பிசினஸ் ஹெட் திரு. அனுப் சந்திரசேகரன் இந்த முனைப்புத்திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கையில், “சர்வதேச யோகா தினத்தையொட்டி, அதிக பயனளிக்கும் ஒரு மெய்நிகர் அமர்வை நடத்துவதற்காக மெட்ராஸ் ரோட்டரி கிளப்புடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் பெரும் உற்சாகம் கெண்டிருக்கிறோம்.  நமது தினசரி செயல்பாடுகளில் யோகாவையும் இணைத்துக்கொள்வது நமது வாழ்க்கையின் தரத்தை பெரிதும் மேம்படுத்தும்; உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் நாம் இன்னும் வளர்ச்சியடைய நமக்கு உதவும்.  யோகாவின்போது பின்பற்றப்படுகின்ற மூச்சுப்பயிற்சி உத்திகள், மனது. உடல் மற்றும் ஆன்மா என்ற வாழ்க்கையின் மூன்று முக்கிய அம்சங்களை சாந்தப்படுத்த உதவுகின்றன.  இந்த சிரமம் மிக்க காலகட்டத்தில் ஆரோக்கியமான செயல் நடைமுறைகளை பின்பற்ற ஒவ்வொருவரையும் வலியுறுத்துவதோடு, எமது பார்வையாளர்களோடு இணைக்கப்படுவதற்காக யோகாவில் நிபுணர்களான அனைவரையும் ஒரு செயல்தளத்தில் ஒன்றாக சேர்ப்பதற்கு கலர்ஸ் தமிழ் விரும்பியது.” என்று கூறினார்.

திருமணம் தொடரின் நட்சத்திரமான ஸ்ரேயா அஞ்சன் பேசுகையில், “இந்த நிகழ்வானது எங்களுக்கு மட்டுமின்றி, எமது நிகழ்ச்சியின் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அளவில் பயனளிக்கும் ஒரு ஆக்கப்பூர்வ அனுபவமாக இருந்தது.  முழுமையான வாழ்க்கையை வாழ்வதற்கு அத்தியாவசியமான உடல்சார்ந்த மற்றும் மனம் சார்ந்த சமநிலையை உருவாக்குவதற்கு யோகா நிச்சயமாக உதவுகிறது என்று நன்கு அறியப்பட்டிருக்கிறது.  அச்சமும், சிரமங்களும் நிறைந்த இந்த காலகட்டத்தில் இந்த சமநிலை இன்னும் அதிகமாக நமக்கு தேவைப்படுகிறது.  இந்த யோகா நிபுணர்கள் பேசுவதை கேட்பதும், அவர்களது யோகப் பயிற்சிகளை காண்பதும் மற்றும் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதும் அற்புதமான அனுபவமாக இருந்தது.  ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்காக யோகா பயிற்சியை நாம் அனைவருமே இனி தொடர்ந்து செய்வோம் என்று நம்புகிறேன்,” என்று கூறினார்.

இதே போன்ற கருத்துகளை வெளிப்படுத்திய திருமணம் தொடரின் இணை – நட்சத்திரம் சித்து, “யோகா அதன் பல்வேறு நலம்பயக்கும் ஆதாயங்களுக்காக உலகெங்கிலும் மிகப்பிரபலமானதாக உருவெடுத்திருக்கிறது.  ஒரே தளத்தில் எங்கள் அனைத்து ரசிகர்களோடும் ஒரு பிணைப்பை உருவாக்கிக்கொள்ள எங்களுக்கு வாய்ப்பளிப்பதாக அமைந்த இன்றைய இந்த யோகா அமர்வானது, மனநிறைவை அளிப்பதாகவும், சக்தியூட்டுவதாகவும் இருந்தது.  கஷ்டமான இந்த காலகட்டத்தில் எமது ரசிகர்களோடு பிணைப்பை உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பை வழங்கியதோடு மற்றும் அவர்களோடு சேர்ந்து யோகா பயிற்சிகளை செய்ய முடிந்ததும் பெரும் ஆனந்த அனுபவமாக இருந்தது என்பதில் ஐயமில்லை.” என்று கூறினார்.

சித்து மற்றும் ஷ்ரேயா உடன் திருமணம் தொடரிலிருந்து டீனா மற்றும் ரைஷா, இதயத்தை திருடாதே தொடரிலிருந்து நிலானி, நவீன் மற்றும் பிந்து, மாங்கல்ய தோஷம் தொடரிலிருந்து அருண், லட்சுமி மற்றும் கீர்த்தி, ஓவியா தொடரிலிருந்து சுரேந்தர் மற்றும் ஹர்ஷலா ஹனி, அம்மன் தொடரிலிருந்து அமல்ஜித், பவித்ரா, நரேன் பாலாஜி மற்றும் சாய் லட்சுமி, உயிரே தொடரிலிருந்து அம்ருத் கலாம் ஆகிய சின்னத்திரை நட்சத்திரங்கள் இந்த யோகா அமர்வில் பங்கேற்று இந்நிகழ்வை பல நட்சத்திரங்கள் பங்கேற்ற ஒரு மாபெரும் நிகழ்வாகவும் மற்றும் அர்த்தமுள்ள யோகா தின அனுசரிப்பாகவும் ஆக்கினர்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே