சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய பாமக எம்.எல்.ஏக்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வெகுவாக பாராட்டினர்.
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் நமக்கு நாமே திட்டம், நகர்ப்புற வேலைவாய்ப்புத்திட்டம் ஆகிய புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 38 கோடியே 53 லட்ச ரூபாய் மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, 54 கோடியே ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான 60 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும் 30,837 பயனாளிகளுக்கு 168 கோடியே 64 லட்ச ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார். தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், திராவிட இயக்க வரலாற்றில் மிகப்பெரிய பங்கு சேலத்திற்கு உள்ளதாகவும், சேலம் மாவட்டத்திற்கு அதிகமான திட்டங்களை தீட்டிய ஆட்சி திமுகதான் என்றும் தெரிவித்தார். இரும்பாலை, ரயில்வே கோட்டம், பெரியார் பல்கலைக்கழகம், தொழில்நுட்பப்பூங்கா, சேலம் மாநகராட்சி குடிநீர் திட்டம் என திட்டங்களை பட்டியலிட்ட முதலமைச்சர், வறுமையை ஒழிக்க வேண்டும் என்பதே தனது இலக்கு கூறினார்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய பாமக எம்.எல்.ஏக்கள் , முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வெகுவாக பாராட்டினர். சேலம் மேற்கு தொகுதி பாமக உறுப்பினர் அருள் பேசும் போது, ‘மாற்றான் தோட்டது மல்லிகைக்கும் மனம் இருக்கும்’ என்ற அண்ணாவின் பேச்சுக்கு ஏற்ப அனைத்து தொகுதி மக்களுக்கும் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார் முதலமைச்சர் என்றார். மேட்டூர் தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், பேசுகையில் கடந்த காலங்களில் உள்ள முதல்வர்களை விட மிக எளிமையான முதல்வராக தமிழக முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார் என்றார். அனைத்து தொகுதிக்கும், எந்த கட்சி பாகுபாடின்றியும் தமிழக முதலமைச்சர் செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.