புலம்பெயர் தொழிலாளர்களிடம் பிரதமர் மோடி மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அண்மையில் புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த விவகாரத்தில் ராகுல்காந்தி நாடகமாடுவதாக விமர்சித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புலம்பெயர் தொழிலாளர்களின் அவல நிலையை வைத்து அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.
இதற்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜீவாலா, புலம்பெயர் தொழிலாளர்களை ராகுல்காந்தி சந்தித்து ஆறுதல் கூறியதை நாடகம் என கூறுவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.
இதற்காக பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள காங்கிரஸ் கட்சி, லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களை அவமதித்தற்காக நிர்மலா சீதாராமனை நாட்டு மக்கள் விட மாட்டார்கள் என்றும் சாடியுள்ளது.