சென்னையில், தனியாக செல்லும் மூதாட்டிகளை குறிவைத்து, ஆட்டோவில் ஏற்றிச்சென்று, உதவுவது போல் நடித்து, நகைகளைப் பறித்துச் செல்லும் ஆட்டோராணிகள், மீண்டும் களமிறங்கி, போலீசாரிடம் சிக்காமல் போக்கு காட்டி வருகின்றனர்.
சென்னை ஷெனாய் நகரைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி ரங்க நாயகி, நேற்று கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது மகனை பார்ப்பதற்காக, அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார்.
அப்போது, அவ்வழியாக ஆட்டோவில் வந்த மூன்று பெண்கள், மூதாட்டியை பேருந்தில் ஏற சிரமப்பட வேண்டாம் என்றும், 5 ரூபாய் கொடுத்தால் போதும், கீழ்பாக்கம் மருத்துவமனையில் இறக்கிவிடுகிறோம் என கூறியதால், அவர்களுடன் மூதாட்டி சென்றுள்ளார்.
செல்லும்போதே, மூதாட்டி கழுத்தில் இருந்த 3 சவரன் தங்கச்சங்கிலி அறுந்தநிலையில் இருப்பதாக கூறி, கழற்றசொல்லி பையில் வைத்துள்ளனர்.
மருத்துவமனையில் அக்கறையுடன் இறக்கிவிட்டு அவர்கள் சென்றபிறகு, தனது பையை பார்த்த மூதாட்டி அதிர்ச்சியடைந்தார். முதலில் கழுத்தில் அணிந்திருந்த செயினை அவர்களே அறுத்துவிட்டு, நாடகமாடி, பின்னர் பையின் அடியில் பிளேடால் அறுத்து செயினை எடுத்துச்சென்றிருந்தது தெரியவந்தது.
இந்நிலையில், இன்று காலையில், முகப்பேர் பகுதியைச் சேர்ந்த தாட்சாயிணி என்ற 65 வயது மூதாட்டி, நுங்கம்பாக்கத்தில் உள்ள வங்கிக்குச் சென்றுள்ளார்.
அப்போது, அவரிடமும், தங்கள் பாணியில் உதவுவதுபோல் நடித்து, ஆட்டோவில் ஏற்றி அழைத்துச் சென்று, சங்கிலியை அறுத்துவிட்டு, அது அறுந்துபோனதாக கூறியுள்ளனர். இதையடுத்து, அவரது 5 சவரன் தங்கச்சங்கிலியை, ஆட்டோராணிகள் திருடிச் சென்றுள்ளனர்.
இதேபோன்று, நேற்று முன்தினம் வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நின்றுகொண்டிருந்தபோது, அவரையும் ஆட்டோவில் ஏற்றி 5 சவரன் சங்கிலியை திருடிச் சென்றுள்ளனர்.
இவ்வாறு, தொடர்ந்து மூன்று நாட்களாக, அடுத்தடுத்து கைவரிசை காட்டிய ஆட்டோராணிகள் 3 பேரும் ஒருவருடத்திற்கு மேலாக போலீசாரிடம் சிக்காமல் உள்ளனர்.
ஆட்டோவில் பயணம்செய்யும் அந்த 3 பெண்களில் இருவர் திருமணம் ஆகியும் ஒருவர் கல்லூரி மாணவி போல் உடையணிந்து வருவார்கள் என்றும், ஆட்டோ ஓட்டும் நபரும் இவர்களின் கூட்டாளிதான் என்கிறார்கள்.
ஏற்கனவே, கடந்த ஜனவரி மாதம் அபிராமபுரம் பகுதியில் கஸ்தூரி என்ற மூதாட்டியிடம் 5 சவரன் நகையை திருடிச் சென்றுள்ளனர்.
அதேமாதம் அயனாவரத்தை சேர்ந்த பத்மாவதி என்ற வயதான பெண்ணிடம் 7 சவரன் நகையை திருடி சென்றுள்ளனர்.
பின்னர், செப்டம்பர் மாதம் திருவெற்றியூரில் பூங்காவனம் என்ற மூதாட்டியிடம் 10 சவரன் நகையை கொள்ளையடித்துள்ளனர். இப்படி பல சம்பவங்களில் ஈடுபட்டுவிட்டு அவ்வப்போது இந்த ஆட்டோராணிகள் தலைமறைவாகிவிடுவர்.
முதியவர்கள் தனியாக வெளியில் செல்லும் சூழல் ஏற்பட்டால், வீட்டில் உள்ளவர்கள் இதுபோன்ற நூதன திருட்டு கும்பல் குறித்து அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி கூறவேண்டும் என, காவல்துறையினர் கோரிக்கை விடுக்கின்றனர்.