அன்றே சொன்னார் டிராபிக் ராமசாமி.

சொல்லி புரிவது ஒரு வகை, அடிபட்டு புரிவது ஒரு வகை, நாம் இதில் இரண்டும் இல்லை.

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் அனுமதி இல்லாமல் பிளக்ஸ் பேனர் வைப்பதை தடை செய்ய வேண்டும் என்றும், அனுமதி இல்லாமல் பிளக்ஸ் பேனர் வைத்தால் அதைத் தண்டனைக்குரிய குற்றமாக கருத வேண்டுமென்று அந்த வழக்கில் குறிப்பிட்டிருந்தார்.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உடனடியாக ஒரு உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவில் இனிமேல் தமிழகத்தில் பிளக்ஸ் பேனர் எங்கு வைத்தாலும் அது அனுமதி பெற்று தான் வைக்க வேண்டும், மீறினால் பிளக்ஸ் பேனர் வைப்பவர் மீதும் மற்றும் அந்த பிளக்ஸ் பேனரை அச்சடித்த அச்சக உரிமையாளர் மீதும் வழக்கு தொடரலாம் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும்  டிராபிக் ராமசாமி பல கட்ட போராட்டங்களை இங்கு முன்னெடுத்தார். அவைகளில் பெரும்பாலும் சட்ட விரோதமாக வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களுக்கு  எதிராகத்தான் இருந்தது.

நீதிமன்ற உத்தரவு இருந்தும் ஒரு தனி மனிதர் அந்த உத்தரவை நடைமுறை படுத்த கூறி மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதெல்லாம் வினோதம் என்று உயர் நீதி மன்றம் கூறியது. அது வினோதம் அல்ல,  இந்த அரசுக்கு அவமானம். முதுகெலும்பே இல்லாதவர்களுக்கு அவமானம் ஒன்றும் பெரிய விஷயமாக இருக்கவில்லை.

நீதிமன்றமும் நமக்கு பயனளிக்காது என்று எண்ணித்தான் களத்தில் இறங்கினார் டிராபிக் ராமசாமி. சட்டவிரோதமாக எங்கு பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுருந்தாலும் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் சொல்வார். அதை அவர்கள் அப்புறப்படுத்த வில்லை என்றால் அவரே அந்த பிளக்ஸ் பேனரை அப்புறப்படுத்துவார்.

பலமுறை இந்த பிளக்ஸ் பேனர் விவகாரத்தால் டிராபிக் ராமசாமி தாக்கப்பட்டிருக்கிறார். அவமானப் படுத்தப்பட்டிருக்கிறார். ஏன் ஒரு முறை அதிமுக தொண்டரின் காலணியால் தாக்கப்பட்டு இருக்கிறார்.

மேம்போக்காக பார்க்கும்போது நமக்கெல்லாம் இது ஒரு செய்தி. “இந்த வயதில் இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை” என்று அப்போது நம்மில் நிறைய பேருக்கு தோன்றியிருக்கும். ஆனால் அவர் அதைப் பற்றி எல்லாம் எப்போதும் கவலைப்பட்டதில்லை.

நான் இந்த கட்டுரையின் மேலே சொல்லியிருந்தது போல் சிலருக்கு சொன்னால் புரியும், சிலருக்கு அடிபட்டால் புரியும். இவை இரண்டு வகையிலும் நாம் இல்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை.

ஏனென்றால் நடந்த தவறுகளுக்கெல்லாம் அதிமுக மட்டும் தான் காரணம் என்பது போல் இன்று நம்மில் பலர் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை அதுதானா?? என்று மனசாட்சியோடு பேசுவோம்.

இந்த கட்டுரையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களில் யாரேனும் ஒருவரின் பெயர் அல்லது புகைப்படம் அல்லது இவை இரண்டுடன் எங்காவது பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருக்கும். நீங்கள் யோசித்தது உண்டா “அந்த பிளக்ஸ் பேனர் அனுமதியுடன்தான் வைக்கப்பட்டிருக்கிறதா என்று ?”.

இது மிகைப்படுத்தல் போல் தெரியலாம். ஆனால் நாம் எப்போதும் ஒரு சம்பவம் நடந்து முடிந்த பிறகுதான் அதைப்பற்றி இங்கு விவாதிப்போம்.

இப்படி நடந்து விடும், இப்படி செய்யாதீர்கள், என்று யாரேனும் நம்மிடம் கூறினால் அவர்களை ஒரு பைத்தியக்காரனைப் போல் பார்த்துவிட்டு கடந்துவிடுவோம்.

டிராபிக் ராமசாமியையும் ஒரு பைத்தியக்காரனைப் போல தான் நம்மில் பெரும்பாலானோர் பார்த்திருக்கிறோம். எங்கோ ஒரு மூலையில் யார் செத்தால் எனக்கென்ன என்று டிராபிக் ராமசாமி நினைத்திருக்கலாம். அப்படி நினைத்திருந்தால் அவர் பல அவமானங்களையும், பல அடிகளையும் சந்தித்துருக்க வேண்டிய அவசியமில்லை.

டிராபிக் ராமசாமி ஏன் பல அவமானங்களுக்கு பிறகும், சட்டவிரோதமாக வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களுக்கு எதிராக போராடினார் என்பது நேற்று நடந்த சம்பவத்தின் மூலமாக பலருக்கும் விளங்கியிருக்கும்.

தற்போது பல அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுடைய தொண்டர்களுக்கு இனிமேல் பிளக்ஸ் பேனர் வைக்க கூடாது என்று உத்தரவிடுகிறார்கள். தற்போது இருக்கும் இந்த சூழ்நிலையில் அவர்கள் இப்படித்தான் பேசி ஆகவேண்டும் வேறு வழியில்லை.

கடந்த 2004 ம் ஆண்டு, ஜூலை மாதம், 16ம் தேதி நடந்த கும்பகோணம் தீ விபத்துக்கு பிறகு தான், ஒரு பள்ளி கட்டிடம் எப்படி இருக்க வேண்டும் என்று விதிமுறைகள் பின்பற்றப்பட்டது. விதிமுறைகள் முன்பே இருந்தும் அதை நடைமுறைபடுத்த அரசுக்கு தேவைப்பட்டது 94 குழந்தைகளின் உயிர்.

அதன்பின் 2013 ஆம் ஆண்டு ஒரு பள்ளி வாகனத்தில் பயணம் செய்த பள்ளி குழந்தை ஒருவர் அந்த வாகனத்தின் பிளாட்பார்ம் உடைந்து விழுந்து அதே வாகனத்தின் பின் சக்கரம் ஏறி அந்த பச்சிளம் குழந்தை இறந்த பிறகு தான் நாம் பள்ளியின் வாகனத்தைப் பற்றி கவலைப்பட ஆரம்பித்தோம். அதற்கான சட்டங்களும் அதற்குபின் தான் நடைமுறைக்கு வந்தது.

ஒரு பள்ளி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், ஒரு பள்ளி வாகனம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற விதிமுறைகள் ஏற்கனவே இங்கு உருவாக்கப்பட்டு இருந்தாலும், அது நடைமுறையில் இல்லை. அது சம்பந்தமாக ஏதேனும் ஒரு விபத்து நடந்து ஒரு உயிர் பலி ஏற்படும்போது மட்டும் இந்த அரசு திடீரென்று தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்வது போல சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என்று கூறிவிட்டு அந்த பிரச்சனையை சுலபமாக கடந்து சென்றுவிடும்.

சுபஸ்ரீ-க்கு பதிலாக அந்த இடத்தில் நாம் அல்லது நம்மை சார்ந்த யாரேனும் ஒருவர் இருந்திருந்தால் நாம் என்ன செய்திருப்போம்? மனித தவறுகளால் நடக்கும் ஒவ்வொரு பேரிழப்புக்கு பிறகு தான்  நாம் அதைப்பற்றி பேச தொடங்குகிறோம்.

அதுபோன்ற ஒரு இழப்பு மறுபடியும் ஏற்படக் கூடாது என்று நாம் சமூகவலைத்தளத்தில் காட்டு கத்து கத்துகிறோம். ஆனால் அடுத்த நாள் அப்படி ஒரு பிரச்சினை இருந்ததா என்றுகூட நம்மில் பலருக்கு ஞாபகம் இருக்கிறதா?? என்றால் இருக்காது.

எந்த அரசியல் கட்சியின் மீதும் அல்லது நம்மை ஆளுகின்ற அரசின் மீதும் மிகச் சுலபமாக பழி சுமத்தி நம்மை யோக்கியர்கள் போல் காட்டிக் கொண்டிருக்கிறோம். ஏதோ அரசியல் கட்சிகள் மட்டும் தான் பிளக்ஸ் பேனர்கள் வைக்கிறார்கள் என்பது போல நம்மில் பெரும்பாலானோர் குதித்து கொண்டிருக்கிறோம்.

காதுகுத்து, கல்யாணம், திருவிழாக்கள், பிரிவு உபச்சார விழாக்கள், பிறந்தநாள் வாழ்த்து, நினைவு நாள் இரங்கல், இன்னும் இன்னும் எத்தனையோ கருமாதிக்கெல்லாம் இப்போது பிளக்ஸ் பேனர் தான் கௌரவம். அதுதான் இங்கு பேஷன்.

சுபஸ்ரீ-க்கு நடந்தது போல் கோவையில் ஒரு அரசியல் கட்சி வைத்த பிளக்ஸ் பேனரினால் ஏற்பட்ட விபத்தில் ஒரு இளைஞர் இறந்து போனதை  நாம் மறந்துருக்க முடியாது. அந்த சம்பவத்திற்குப் பிறகு சில நாட்கள் சமூக வலைதளங்களில் அது பற்றி தொடர்ந்து விவாதிக்கப்பட்டது.

இது எல்லாமே விவாதம் செய்வதோடு முடிந்து விடுவது தான் பெரும் சோகம்.

சரி நாம் என்னதான் செய்யவேண்டும்??

நாம் வைக்கும் பிளக்ஸ் பேனரை அரசு தடுக்கும். போலீஸ் அதிகாரிகள் வந்து தடுப்பார்கள் என்று நினைத்து வைக்காதீர்கள். இந்த பிளக்ஸ் பேனரால் ஏதேனும் விபத்து நடக்குமா? அதற்கான வாய்ப்புகள் ஏதேனும் உள்ளதா?? என்று மட்டும் பாருங்கள்.

அப்படி இருந்தால் தயவுசெய்து பிளக்ஸ் பேனர் வைக்காதீர்கள். மனித தவறுகளால் நடக்கும் எல்லா மோசமான நிகழ்வுக்கு பின்னாலும் நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான், அது என்னவெனில் இனிமேல் அந்த தவறை செய்யாமல் இருப்பது, இந்த வார்த்தை கொஞ்சம் பழசு தான் ஆனால் அதை தவிர நமக்கு வேறு வழியும் இல்லை, தீர்வும் இல்லை. 

S.முகம்மது சிக்கந்தர்
தலைமை செய்தி ஆசிரியர்

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 404 posts and counting. See all posts by Jiiva

3 thoughts on “அன்றே சொன்னார் டிராபிக் ராமசாமி.

 • தெளிவான கட்டுரை ஆனால் சற்று நீளமாக உள்ளது.சுபஸ்ரீ க் கு ஆழ்ந்த இரங்கல்😥😥😥

  Reply
  • ஆழ்ந்த இரங்கல்

   Reply
 • பேனர் வைத்த **** பையனை உடனே கைது செய்ய வேண்டும்

  Reply

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே