உங்கள் துணையுடன் சண்டை வராமல் இருக்க சில அறிவுரைகள்..!!

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் உறவுகள் என்பது முக்கியமான அங்கம். நண்பர்களோ, உறவினர்களோ என யாராவது உங்களிடம் அன்பு செலுத்தினால், அதை ஏற்பதும் மறுப்பதும் உங்களுடைய முடிவாகும். உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால், கட்டாயத்தின் பேரில் பிறரிடம் நட்பு கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு விருப்பமில்லாத ஒன்றை நிராகரிக்க தயங்க வேண்டாம். உங்களின் மன நிலையை பிறரிடம் எடுத்துக் கூறி விளக்குவதினால், குழப்பங்களை தவிர்க்க முடியும்.

பெற்றோர்கள் முடித்து வைத்த திருமணமாக இருந்தாலும், காதல் மணம் புரிந்த தம்பதியராய் இருந்தாலும், மணமொத்த தம்பதியராய் வாழ்க்கை முழுக்க வாழவே கணவன் மனைவி இருவரும் விரும்புவார்கள். கண்ணும் கண்ணும் கலந்து காதல் புரிந்து ஊடலோடு திருமணம் செய்து கொண்ட தம்பதியர் கூட பிரிவை அதிகம் சந்தித்து வருவது சமீப காலமாக அதிகரித்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் விவாகரத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே தம்பதியரின் அன்னியோன்யம் குறைந்து வருவதற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம். பொருளாதார பிரச்சனை, குடும்பத்தில் சிறு சச்சரவுகள், குழந்தை வளர்ப்பு, உடல் ஆரோக்கிய குறைபாடு இவையெல்லாம் தம்பதியருக்குள் எவ்வித பிளவையும் பெரிதாக உண்டாக்குவதில்லை. ஆனால் மனதையும், உடலையும் மகிழ்ச்சியாக்கும் தாம்பத்தியத்தில் உருவாகும் குறைபாடே இருவருக்குள் இருக்கும் அன்னியோன்யத்தைக் குறைத்து விரிசலை அதிக மாக்கிவிடுகிறது. அந்தவகையில் உறவுகளில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மற்றும் பழக வேண்டிய பலவற்றை நாம் தெரிந்து கொள்வோம்.,

மனம் விட்டு பேசுங்கள் :

மற்றவர்களின் முன்னிலையில், உங்களது பிரச்சனைகள் குறித்து விவாதிப்பது குழப்பத்தை உண்டாக்கும். உங்களுக்கான நேரத்தை ஒதுக்கி, கோபம், சோர்வு மற்றும் மன குழப்பங்கள் இல்லாத சமையத்தில் இருவரும் உட்கார்ந்து பேச வேண்டும். கூட்டுக்குடும்பங்களில் வாழ்ந்தவர்கள் பலரும் இன்றைக்கு கருத்து வேறுபாடுகளினால் தனித் தனி குடும்பமாய் மாறிவருகின்றனர். இதற்கு காரணம் அவசர யுகத்தில் ஒருவருக்கொருவர் சரியாக தொடர்பு கொள்ளமுடியாததே.

ஒரே வீட்டில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் சரியாக பேசிக்கொள்ளாத காரணத்தினால் இடைவெளிகள் ஏற்படுகின்றன. இந்த இடைவெளிகளே நாளடைவில் விரிசலுக்கு காரணமாகின்றன. ஆனால் ஒருசில குடும்பங்களில் வசிப்பவர்கள் இன்றைக்கும் ஒற்றுமையுணர்வோடு ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். அதற்குக் காரணம் விட்டுக்கொடுத்தல் என்ற மந்திரம் தான். உங்கள் மனதில் உள்ளவற்றை சரியான நேரத்தில் உரியவரிடம் கேட்டுவிடுங்கள். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு ஒன்றாக அமர்ந்து பேசினாலே உறவுகளில் விரிசல்கள் எழ வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள். குடும்ப உறவுகளை தக்க வைத்துக்கொள்ள மனம் விட்டு பேசுங்கள்.

துணையிடம் வெறுப்பு வேண்டாம் :

தனிப்பட்ட முறையில் இருவருக்கும் இருக்கும் ஆசைகளைத் தங்களுக்காக மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வேண்டாம். இருவரது உறவினர்களைப் பற்றியோ குடும்ப உறுப்பினர்கள் குறித்தோ குறைகளை அடுக்காமல் அவரவர்களது இயல்பு அப்படிதான் என்னும் மனநிலைக்கு கணவன் மனைவி இருவருமே வருவது பல சமயங்களில் பல பிரச்சனைகளைக் (problem) கட்டுப்படுத்தும்.

இந்தத் தருணங்களில் இறுதி வரை ஒன்றாக இணைந்து வாழ்வது இருவர் மட்டும்தான் என்னும் மனநிலையை வலுவாக்குங்கள். குறைகளை சுட்டிகாட்டி பேசுவதும் மனதில் வெறுப்பை உண்டாக்கும். முக்கியமாக பிரச்சனைகளைப் பெரிதாக்காமல் இருவரும் பொறுமையாக பேசி முடிவு செய்ய வேண்டும் என்பதை ஒரு கொள்கையாக வைத்திருங்கள். ஒருவருக்காக ஒருவர் மாற்றி கொள்வதை விட இருவரும் இணைந்து ரசிப்பது பல நேரங்களில் இல்லற வாழ்க்கையை சுவாரஸ்யமாக்கும்.

அன்பை வெளிப்படுத்துங்கள் :

பெரும்பாலும் உடலுறவு தேவையை வெளிப்படுத்துவது ஆண்கள் தான். மனைவியின் தேவையை உணர்ந்து செயல்படும் கணவனுக்கு தாம்பத்தியமும் இனிமையாக கிடைக்கும் என்கிறார்கள் உளவியலாளர்கள். கரிசனமான அன்பு, பரிவான வார்த்தை இவைதான் பெரும்பான்மையான மனைவியின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. என்னுடைய தேவையை கவனிக்கும் ஒரே பெண் நீ மட்டும்தான் என்னும் கணவனின் வெளிப்படையான அன்பும் பேச்சும் மனைவியின் அன்பை மொத்தமாகப் பெறச்செய்கிறது.

உறவுகள் முன்னிலையிலும் பொதுப்படையான அன்பை வெளிப்படுத்த இருவருமே தயங்க வேண்டாம். உங்கள் இரு குடும்ப உறவுகள் எப்போதும் ஏதாவது விசேஷங்களில் மட்டும் கூடுவதற்கு பதிலாக எந்த காரண காரியமும் இல்லாமல் அடிக்கடி இரண்டு குடும்பத்தாரரையும் பாசத்தோடு வீட்டிற்கு அழைப்பதும் அதேப் போல் அவர்களை சந்திக்க செல்வதும் குடும்ப உறவுகளை மேலும் வலுவடைச் செய்யும் இதனால் பகைமையும் ஒழியும்.

ஆழமான முத்தம் :

உடலுறவு மட்டுமே தாம்பத்தியம் என்று நினைக்காமல் உங்கள் துணை உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் போதெல்லாம் ஒரு முத்தத்தைக் கொடுத்துவிடுங்கள். எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும் இந்த அன்பான ஊடல் பரிசு உங்கள் துணையின் சோர்வை விரட்டியடிக்கும். உங்கள் மீதான கோவத்தையும் பொடியாக்கிவிடும். நேரம் காலம் இல்லாமல் கொடுக்கும் இந்தப் பரிசு நீங்கள் தேடி தேடி வாங்கும் விலை மதிப்புள்ள பரிசை விட சிறந்த பரிசு.

ஒரு முத்தத்தில் குறைந்தது 12 கலோரிகள் எரிக்கப்படுகின்றன. முத்தம் கொடுப்பதன் மூலம் தலைவலி, மன அழுத்தம் குறையும். ஒவ்வாமை குறையும். உடல் ரிலாக்ஸ் ஆகும். தொடர்ந்து 1 நிமிடத்திற்கு மேல் முத்தம் கொடுக்கும்போது 26 கலோரிகள் எரிக்கப்படுகின்றன. உணர்ச்சிகளுக்குக் காரணமான அட்ரினலின் ஹார்மோன் சுரப்பு அதிகமாகும்.

உங்கள் உறவில் புதுமை :

தாம்பத்தியம் மகிழ்ச்சியாக இருக்கும் பட்சத்தில் அடுத்த நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக வேலை பார்க்க உதவும். இதை ஆய்வுகளும் உறுதிபடுத்தியிருக்கின்றன. ஒரே மாதிரியாக உறவு கொள்ளாமல் உறவு புரிவதிலும் அவ்வபோது மாற்றங்களைச் செய்யுங்கள். இது உடலுறவில் ஈர்ப்பை அதிகரிக்கும். புதுமையான முறையில் உறவில் ஈடுபடுவதோடு உங்கள் துணையின் விருப்பமும் முக்கியம். அன்பை வெளிப்படுத்திக் கொள்வதில் இருக்கும் மகிழ்ச்சியைப் போல் தாம்பத்தியத்தில் விருப்பத்தைத் தெரிவிக்கும் போதும் இரட்டிப்பாகவே இருக்கும்.

மேலும் தாம்பத்தியத்தில் நெருக்கம் அதீத அன்பை இருவருக்குள் உண்டாக்கும். உங்களுக்கான நேரத்தை, உங்களது அன்பை யாருக்கு நீங்கள் கொடுக்க வேண்டும் என்பது உங்களுடைய முடிவு. பிறரின் மன நிலையை எண்ணி உங்களை நீங்கள் காயப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்.

ஒருவரை ஒருவர் நேசிக்க சிலவற்றை விட்டுக்கொடுங்கள் :

நண்பர்களோ, உறவினர்களோ, அல்லது யாராக இருந்தாலும், உங்களிடம் இருந்து அன்பை, காதலை, நேரத்தை எதிர்பார்க்கிறார்கள் என்றால், நீங்கள் அவர்களுக்கு சிலவற்றை விட்டுக்கொடுத்து அவர்களுடன் அமர்ந்து பேச வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு நேரத்தை ஒதுக்க இப்போது உங்களுக்கு ஆர்வம் இல்லை என்பதையும் சொல்லிவிட வேண்டும். தெளிவாக சொல்லிவிடுவதன் மூலம், இருவருக்குமிடையே இருக்கும் குழப்பங்கள் தீர்ந்துவிடும். குடும்பம் என்றாலே ஏதாவது சண்டைச் சச்சரவுகளும், மன சக்கசப்புகளும் இருக்கத்தான் செய்யும் அவ்வாறு குடும்பத்தில் ஏற்படும் மனக்கசப்புகளுக்கு அதிக இடம் தராமல் சமாதானமாகப் போவது தான் விட்டுக் கொடுப்பதிலேயே தலையாயதாய் இருக்கும்.

அவ்வாறு விட்டுக் கொடுத்து விரோதம் பார்க்காமல் வாழ்வதும் ஒரு கலைதான். குடும்பங்கள் கூடி மகிழ்கின்ற தருணங்களிலும் பிரச்சனைகள் எழலாம், இதை முன்கூட்டியே எதிர்பார்த்து அவ்வாறான சூழ்நிலைகளை சந்திக்கும் மனப்போக்கையும் வளர்த்து வருவது மிகவும் நல்லது. இதனால் யார் என்ன பேசினாலும் கேலி செய்தாலும் அவை நமது மனதை அதிகம் பாதிக்காது. உங்கள் துணையிடம் நீங்கள் காட்டும் அன்பு அந்த நிமிடத்திற்கு மட்டுமல்லாது ஆண்டாண்டு காலம் அது நிலைத்திருக்கும். ஏனெனில் உங்களுடன் வாழ்க்கையின் இறுதிவரை பயணிக்கப் போகும் நபர் உங்கள் துணை மட்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உறவுகள் என்பது நாம் நினைப்பு மட்டும் அல்ல. உறவுகள் தானாக அமைவதோ அல்லது காலப்போக்கில் உருவாவதோ அல்ல. உறவுகளின் கட்டுமானத்தை நாம் தான் கட்டியெழுப்ப வேண்டும். எந்த உறவு முக்கியமோ அந்த உறவை வலுவான பிணைப்புடன் கட்டியெழுப்ப மேற்சொன்னவைகள் நிச்சயம் உங்களுக்கு உதவும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே