ஒரு நாளைக்கு எத்தனை தடவை உடலுறவு பற்றிய சிந்தனை வரும்…???

ஒவ்வொரு ஏழு விநாடிகளுக்கும் ஒருமுறை ஆண்கள் பாலியல் உறவு குறித்து சிந்திக்கிறார்களா? இது உண்மை என்று பலரும் நம்புகிறார்கள்.

ஆனால், அது சாத்தியமா? அப்படியே அது சாத்தியம் என்றாலும், அதனை எப்படி நிரூபிப்பது?

கொஞ்சம் கணக்கு போட்டு பார்த்தால், ஓர் ஆண் ஒவ்வொரு ஏழு விநாடிகளுக்கும் பாலியல் உறவு குறித்து நினைக்கிறார் என்றார், ஒரு மணி நேரத்திற்கு 514 முறை, ஒரு நாளைக்கு 7,200 முறை அது குறித்து சிந்திக்கிறார் என அர்த்தம்.

என்னை பொருத்தவரை இது மிகவும் அதிகம். மேலும் ஒருவர் ஒரு நாளில் இத்தனை முறை இதைப்பற்றி நினைக்கிறார் என்று எப்படி கணக்கிட முடியும்?

மனதில் தோன்றும் எண்ணங்களை கணக்கிட அறிவியல்பூர்வமான முறை ஒன்றை உளவியலாளர்கள் பின்பற்றுகின்றனர்.

அதற்கு பெயர் “எக்ஸ்பீரியன்ஸ் சேம்பிளிங்”.

தினசரி வாழ்வில் மக்களிடத்தில் சென்று, அந்த சமயம் அவர்கள் மனதில் என்ன மாதிரியான எண்ணங்கள் இருக்கிறது என்று கேட்டறிவதே அந்த முறை.

இதற்கு ஒஹாயோ மாகாண பல்கலைக்கழகத்தில் டெர்ரி ஃபிஷர் மற்றும் அவரது ஆய்வுக்குழு ‘கிளிக்கர்ஸ்’ என்ற கருவியை பயன்படுத்தினார்கள்.

இதனை மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்ட 283 கல்லூரி மாணவர்களிடம் அளித்து, ஒவ்வொரு முறை பாலியல் உறவு, உணவு அல்லது உறக்கம் குறித்து சிந்திக்கும் போதும் இந்த கருவியின் பொத்தானை அழுத்த வேண்டும் என்று அவர்களிடம் கூறப்பட்டது.

இதன்படி, ஒரு நாளில் ஓர் ஆண் சராசரியாக 19 முறை பாலியல் உறவு குறித்து யோசிப்பது தெரிய வந்துள்ளது. அதுவே பெண் ஒரு நாளில் 10 முறை பாலியல் உறவு குறித்து சிந்திக்கிறாள்.

எனினும், உணவு மற்றும் உறக்கம் குறித்து ஆண்கள் அதிகம் சிந்திப்பதும் இதில் தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வில் பல வேறுபாடுகள் சுவாரஸ்யமாக இருந்தன. சிலர் நாள் ஒன்றுக்கு ஒருமுறை மட்டுமே பாலியல் உறவு குறித்து சிந்திப்பதாக தெரிவித்தனர்.

அதே நேரத்தில் ஒருவர் ஒரு நாளைக்கு 388 முறை கிளிக்கர்ஸ் கருவி பொத்தானை அழுத்தியுள்ளார். அதாவது ஒவ்வொரு இரண்டு நிமிடங்கள் அவருக்கு பாலியல் உறவு குறித்த எண்ணம் எழுந்துள்ளது பதிவு செய்யப்பட்டது.

ஆனால், நீங்கள் ஏதேனும் ஒன்று குறித்து சிந்திக்க தொடங்கிவிட்டு, அதனை மறக்க வேண்டும் என்று நினைத்தால், அந்த விஷயம் மீண்டும் உங்கள் மனதில் தோன்றும்.

இதே போன்ற நிலையில்தான் ஃபிஷர்ஸின் ஆய்வில் பங்கேற்ற நபர்களும் இருந்தார்கள்.

அவர்களிடம் கிளிக்கர்ஸ் கருவி வழங்கப்பட்டு ஒவ்வொரு முறை பாலியல் உறவு குறித்து சிந்திக்கும்போதும் அதனை அழுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தங்கள் கல்லூரியில் இந்த கருவியை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்போது, பாலியல் உறவு குறித்து நினைக்காமல் இருக்க முயற்சிப்பது, அதே நேரத்தில் அது குறித்து சிந்திக்கும்போதெல்லாம் மறக்காமல் பொத்தானை அழுத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்று.

இதனை கணக்கிட வில்ஹெல்ம் ஹாஃப்மென் மற்றும் அவரது குழு ஜெர்மன் இளைஞர்களை வைத்து வேறு ஒரு முறையை கையாண்டது.

அவர்களிடம் ஸ்மார்ட் போன் கொடுக்கப்பட்டு அதில் ஒரு வாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடைவெளிகளில் நாள் ஒன்றுக்கு அலார்ம் போன்ற ஒரு எச்சரிக்கை மணி செட் செய்யப்பட்டது.

அந்த ஒலி அடிக்கும்போதெல்லாம் அவர்கள் மனதில் சற்று முன்பு என்ன தோன்றியது என்பதை பதிவு செய்திட வேண்டும்.

ஆனால் இந்த முறையில் இதில் பங்கேற்றவர்கள் பாலியல் உறவுக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று தெரிந்தது சற்று அதிர்ச்சியாகவே இருந்தது.

உணவு, உறக்கம், தனிப்பட்ட சுகாதாரம், சமூக தொடர்பு, மாலை நேர காஃபி போன்றவை குறித்து அவர்கள் அதிகம் யோசித்துள்ளனர்.

மேலும் பாலியல் உறவு அல்லாமல் தொலைக்காட்சி பார்ப்பது, இ மெயில் பார்ப்பது, மற்றும் மற்ற ஊடகங்களை பயன்படுத்துவது குறித்த யோசனையும் அதிகம் இருக்கிறது.

சொல்லப்போனால், இரவில்தான், அதுவும் நள்ளிரவில்தான் பாலியல் உறவு குறித்த சிந்தனை அதிகம் வருவது தெரிய வந்துள்ளது.

அதுவும் இரண்டாவது இடத்தையே பிடித்துள்ளது. முதலில் உறக்கம் குறித்து அதிகம் சிந்திக்கிறார்கள்.

இதில் நாம் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். சிலர் பாலியல் உறவு குறித்து சிந்தனை வருகிறது என்பதை ஒப்புக்கொள்ள தயக்கம் காட்டுவார்கள். அதுவும் இதுபோன்ற ஒரு முடிவுக்கு காரணமாக இருக்கலாம்.

எனினும் இதனை வைத்து, ஓர் ஆண் ஒவ்வொரு ஏழு விநாடிகள் பாலியல் உறவை குறித்து சிந்திப்பதாக வலம்வரும் கூற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிகிறது.

இதுபோன்ற விஷயங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப, ஒவ்வொருவருக்கும் பெரிதும் மாறுபடலாம்.

மேலும், சென்டிமீட்டர், மீட்டர், கிலோ மீட்டர் என தூரத்தை கணக்கிடுவது போல எண்ணங்களை கணக்கிட எதனாலும் முடியாது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே